தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்:தாயுமானவர் பாடல்களிலிருந்து)

 

நீவீர் தினமும் இறைவனிடம் வேண்டுவது யாதோ?

 

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றும் அறியோம் பரபரமே

 

அருமையான வரிகள். இதை தினமும் ஒருவர் நினைத்தால் உலகம் முழுதும் அமைதி நிலவுமே. மந்திர தந்திரங்கள் செய்யத் தெரியுமா?

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்

கரடி வெம் புலி வாயையும்

கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்

கண் செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்

வேதித்து விற்று உண்ணலாம்

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலா வரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்

சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மற்றும் ஒரு

சரீரத்தினும் புகுதலாம்

சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்

தன் நிகரில் சித்தி பெறாலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறம் அரிது  சத்தாகி என்

சித்தமிசை குடி கொண்ட

தேசோ மயானந்தமே

 

புரிகிறது, புரிகிறது, அஷ்டமா சித்திகள் கிடைத்தாலும் மனதை

அடக்குவதுதான் கடினம். “சும்மா இரு சொல் அற” என்றும் “பேசா அனுபூதி பிறந்ததுவே” என்றும் அருணகிரிநாதர் கூறுகிறாரே?

 

சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கே

அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே

 

மனதை சும்மா இருக்கவைப்பது எவ்வளவு கடினம் என்று அழகாகச்

சொல்லிவிட்டீர்கள். “இறைவன் சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச்

சத கூறு இட்ட கோணிலும் உளன்” என்று கம்பன் கூறுகிறானே?

 

மண்ணும் மறிகடலும்  மற்றுளவும் எல்லாம் உன்

கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே

 

ஓ! உமக்கும் அர்ஜுனனைப் போல விசுவ ரூப தரிசனம் கிடைத்ததா? புலால் சாப்பிடாதவர்களை “எல்லா உயிரும் கை கூப்பித் தொழும்” என்று எங்கள் வான் புகழ் வள்ளுவன் கூறுகிறானே?

 

“கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லார் மற்று

அல்லாதோர் யாரோ அறியேன் பராபரமே”

“கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க

எல்லோர்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே”

 

அட, நீங்களும் வள்ளுவர் கட்சிதானா? கடவுளை நம்பினால் கிரகங்கள்

ஒன்றும் செய்யாது என்று தேவாரம் கூறுகிறதே?

கன்மம் ஏது? கடு நரகு ஏது? மேல்

சென்மம் ஏது? எனைத் தீண்டக் கடவதோ!

 

சுகர், ஜனகர் போன்று தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்க்கை

நடத்தியவர்களை உங்களுக்குப் பிடிக்குமாமே.

“மதுவுண்ட வண்டு எனவும் சனகன் ஆதி

மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார்”

“ஓதரிய சுகர் போல் ஏன் ஏன் என்ன

ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன்”

 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று திருமூலர் சொல்லுகிறார். நீங்கள்……

“சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம்பொருளைக்

கை வந்திடவே மன்றுல் வெளி காட்டும் இந்தக் கருத்தை விட்டுப்

பொய் வந்துழலும் சமய நெறி புகுத வேண்டா முக்தி தரும்

தெய்வ சபையை காண்பதற்கு சேரவாரும் சகத்தீரே”

“காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ

போகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பி பூரணமாய்

ஏக உருவாய்க் கிடக்குதையோ இன்புற்றிட நாம் இனி எடுத்த

தேகம் விழும் முன் புசிப்பதற்கு சேர வாரும் சகத்தீரே!”

 

நீர் எல்லா சமயங்களும் ஒன்று என்று அழகாகப் பாடியிருக்கிறீர்.

இதை எல்லோரும் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்

விளங்கு பரம் பொருளே! நின் விளையாட்டல்லால்

மாறுபடும் கருத்து இல்லை; முடிவில் மோன

வாரிதியில் நதித் திரள் போல் வயங்கிற்றம்மா

 

சாக்கிய நாயனார் கல்லால் அடித்தபோதும் அர்சுனன் வில்லால்

அடித்தபோதும் கூட சிவன் அருள் செய்தாராமே?

கல்லால் எறிந்தும் கை வில்லால்

அடித்தும் கனி மதுரச்

சொல்லால் துதித்தும் நற் பச்சிலை

தூவியும் தொண்டர் இனம்

எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற

நான் இனி ஏது செய்வேன்!

கொல்லா விரதியர் நேர் நின்ற

முக்கட் குரு மணியே!

 

நன்றி, தாயமானவரே.அருமையான செய்யுட்கள். “அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது”, “மனம் ஒரு குரங்கு” என்று பல பொன்மொழிகளைப் பாட்டில் வைத்துப் பாடியுள்ளீர்கள்.உமது புகழ் தமிழ் உள்ள வரை வாழும்.

 

Leave a comment

1 Comment

  1. மண்ணுலக மாந்தர்களை விண்ணாளும் வேந்தர்களாக மாற்றும் திறனை மனதை அடக்கினாலே பெறலாம் என்ற உண்மையை உலகிற்கு எடுத்து உரைத்த மகான் தாயுமானவரின் உன்னதத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்து கூறியுள்ளீர்கள். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் எழுத்துலகில் வண்ணங்களாக மாறுவதற்கு அந்த தாயுமானவரின் மலரடியினை தொழுகின்றோம்

    அன்புடன்
    கல்யாண்ஜி

Leave a comment